முக்கியத்துவம் வாய்ந்த இந்த டிஜிட்டல் தரவுகளை எதிர்கால சந்ததியினருக்காக சேமிக்கும் முயற்சியாக தாங்கள் இதனைச் செய்யத் திட்டமிட்டுள்ளதாக அந்த நூலகம் கூறுகிறது. டுவிட்டரில் ஒரு நாளைக்கு 50 மில்லியனுக்கும் அதிகமான சுருக்கமான தகவல்கள் அனுப்பப்படுகின்றன. இந்தக் டுவிட்டர் குறுந்தகவல்களை ஆங்கிலத்தில் ட்வீட்ஸ் என்று கூறுகிறோம்.
பொதுவாக இந்த தகவல்கள் ஒவ்வொன்றும் 140 எழுத்துருக்களுக்கு மேல் போகாமல் சுருக்கமாக அமைந்திருக்கும். ஆனால் இவை வரலாற்று ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்த தரவுகளை தன்னுள் கொண்டிருப்பதாக அமெரிக்காவின் நூலக காங்கிரஸ் அமைப்பு கருதுகிறது. அதன் காரணமாகவே, பொது தளத்தில் இருக்கும் அனைத்து டுவீட் தகவல்களையும் ஆவணப்படுத்த அந்த அமைப்பு திட்டமிட்டிருக்கிறது. இத்திட்டத்தை தனது வலைப்பூ (பிளாக்) மூலம் அறிவித்த அமெரிக்க காங்கிரஸ் நூலக பேச்சாளர், இதன் பின்னணியில் பொதிந்திருக்கும் புலமைத்துவம் மற்றும் ஆராய்ச்சி பயன்பாடுகளையும் விவரித்திருந்தார். இப்படி ஆவணப்படுத்தப்பட இருக்கும் டுவீட் தகவல்களில் தாம் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட உடன் அமெரிக்க அதிபர் ஒபாமா அனுப்பிய டுவீட் தகவலும் அடங்கும். அதில், "நாம் தற்போது தான் வரலாற்றை உருவாக்கியிருக்கிறோம்" என்று அவர் கூறியிருந்தார். அதேபோல டுவிட்டரை உருவாக்கியவர்களில் ஒருவரான ஜாக் டோர்ஸி அனுப்பிய உலகின் முதல் டுவீட் தகவலும் ஆவணப்படுத்தப்பட இருக்கிறது. "நான் இப்போதுதான் எனது டுவிட்டரை வடிவமைத்துக் கொண்டிருக்கிறேன்" என்று 2006ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட அந்த டுவிட்டரில் அவர் கூறியிருந்தார். டுவிட்டரில் அனுப்பப்படும் பலவகையான சின்னச்சின்ன செய்திகள் எதிர்கால வரலாற்று ஆய்வாளர்களுக்கு எப்படி பயன்படக்கூடும் என்பது குறித்து யாராலும் இப்போதைக்கு அறுதியிட்டு கூறமுடியாது. காரணம் டுவிட்டரில் அனுப்பப்படும் செய்திகள் பெரும்பாலும் அதை அனுப்புபவரின் சொந்தக்கதை சோகக்கதைகளாகவே அமைந்திருக்கின்றன. அலுவலகத்தில் தான் சந்தித்த பிரச்சினைகள் பற்றி அல்லது தான் அடுத்து கடைவீதிக்கு செல்லப் போவதை பற்றி, தனது வீட்டு குளிர்பதனியில் பாசம் வளர்வதை பற்றி என்று அன்றாட வாழ்வின் அனுபவங்கள் அல்லது அவலங்களே ட்விட்டரில் பெரும்பகுதியை ஆக்கிரமித்துள்ளன. ஒருவரின் சொந்த மின்னஞ்சல் மற்றும் அவரது ஃபேஸ்புக் தகவல்களை அவரால் அனுமதிக்கப்பட்டவர்கள் மட்டுமே பார்க்கவோ படிக்கவோ முடியும். ஆனால் டுவிட்டரில் அனுப்பப்படும் செய்திகளை பொதுவாக யார் வேண்டுமானாலும் பார்க்கலாம், படிக்கலாம். எனவே இவற்றை ஆவணப்படுத்தும் நடவடிக்கை, தனிமனித அந்தரங்கத்தில் தலையிடும் செயல் என்ற கவலையைத் தோற்றுவிக்காது எனத் தெரிகிறது.
No comments:
Post a Comment