மேலதிக கல்விச் செயற்பாடுகள், தொலைக்காட்சிப் பாவனை ஆகியவற்றால் 13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் ஒரு நாளில் சுமார் ஒரு மணித்தியாலம் மாத்திரமே சிறுவர்களாக இருக்கின்றனர் என்று பிரித்தானியாவில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பு ஒன்றில் தெரிய வருகிறது. 2000 பெற்றோர்கள் மத்தியில் இந்தக் கருத்துக் கணிப்பீடு இடம்பெற்றது.
மேலதிக கல்வி செயற்பாடுகள், பாடசாலைகளுக்கு செய்து கொண்டு போக வேண்டிய வீட்டு வேலைகள், மாணவர் கழகச் செயற்பாடுகள், தொலைக்காட்சிப் பாவனை ஆகியவற்றில் சிறுவர்கள் மூழ்கிப் போய் உள்ளார்கள் என்றும் இதனால் விளையாட கூட அவர்களுக்கு நேரம் கிடையாது என்று 66 வீதமான பெற்றோர் கூறி உள்ளனர்.
முன்பு எப்போதும் இல்லாதவாறு இன்றைய நாட்களில் சிறுவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டிருக்கிறார்கள் என்று 51 வீதமான பெற்றோர் தெரிவித்தனர். சிறுவர்களுக்கு வேறு அலுவல்களுக்கு நேரம் இல்லை என்று 20 வீதமான பெற்றோர் சொன்னார்கள். சிறுவர்களின் இந்நிலைமைக்கு தொலைக்காட்சிகளே காரணம் என்று 37 வீதமான பெற்றோர் குற்றஞ்சாட்டினர்.
பாடசாலையில் இருந்து திரும்பி வரும்போது ஏற்படுகின்ற பிரயாணக் களைப்பு, மாணவர் கழகச் செயற்பாடுகளே சிறுவர்களின் நேரப் பற்றாக்குறைக்குக் காரணம் என்று 23 சதவீதமானோர் வலியுறுத்தினர். ஒரு நாளில் 69.77 நிமிடங்கள் மாத்திரமே சிறுவர்கள் விளையாடுகின்றனர் என்றும் அவர்களின் விளையாட்டுச் செயற்பாடுகள் இன்னும் 72.67 நிமிடங்களால் அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் அநேகமான பெற்றோர் கூறி உள்ளனர். பிள்ளைகளுடன் கூடுதலான நேரம் சின்னச் சின்ன குறும்பு விளையாட்டுக்களில் ஈடுபட 43 வீதமான பெற்றோர் ஆவலாக உள்ளனர்.
No comments:
Post a Comment