Tuesday, July 6, 2010
மார்பக புற்றுநோய்
ஸ்டாக்ஹோம்: ஏழு வயதில் ஒல்லியாக இருக்கும் சிறுமிகளுக்கு, அவர்கள் நடுத்தர வயதை தாண்டும் போது மார்பகப் புற்றுநோய் ஏற்படும் ஆபத்து அதிகம் இருப்பதாக ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
சுவீடனை சேர்ந்த கரோலின்ஸ்கா கல்வி நிறுவன ஆராய்ச்சியாளர்கள், மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதில் சிறுவயதினரின் தொடர்பு பற்றி ஆராய்ச்சி நடத்தினர். சுவீடனில் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 2,818 பேரிடமும், ஆரோக்கியமாக உள்ள 3,111 பெண்களிடமும் ஆய்வு நடத்தி தகவல்களை சேகரித்தனர்.
மார்பகப் புற்றுநோயாளிகளில் பெரும்பாலோர், 7 வயது சிறுமியாக இருந்தபோது மிகவும் ஒல்லியாக இருந்தது தெரிய வந்தது. ஆரோக்கியமாக இருப்பவர்களில் அதிகம் பேர் 7 வயதில் சதைப் பிடிப்புடன் இருந்துள்ளனர்.
உடல் கொழுப்பு தொடர்பான அட்டவணை ‘பாடி மாஸ் இண்டெக்ஸ்’ (பிஎம்ஐ) எனப்படுகிறது. 7 வயது சிறுமியின் பிஎம்ஐ&க்கும் எதிர்காலத்தில் புற்றுநோய் கட்டிகளை உருவாக்கக் கூடிய ஆஸ்ட்ரோஜென் உருவாவதற்கும் தொடர்பு இருப்பதே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.
இதுபற்றி ஆராய்ச்சியாளர் ஜிங்மெய் லீ கூறுகையில், ‘‘7 வயதில் நடுத்தர அளவில் குண்டாக இருக்கும் சிறுமிகளுக்கு எதிர்காலத்தில் மாதவிலக்குக்குப் பிறகு மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு குறைவாக உள்ளது. குழந்தைப் பருவத்தில் ஒல்லியாக இருக்கும் பெண்களுக்கு பின்னாளில் மார்பக புற்றுநோய் ஏற்படும் ஆபத்து அதிகம் உள்ளதாக கருதுகிறோம்’’ என்றார். அறிவியல் பத்திரிகையான ‘நேச்சர்’ வெளியிட்டுள்ள இதுதொடர்பான மற்றொரு ஆராய்ச்சிக் கட்டுரையில், மார்பகப் புற்றுநோயை வேகமாக பரவச் செய்யும் 20 மரபணு மாற்றங்களும் விவரிக்கப்பட்டுள்ளன.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment