ஜெருசலேம்: காஸாவுக்கான உதவிக் கப்பல்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல் குறித்த சர்வதேச விசாரணையொன்றை நடத்துவதற்கான முயற்சிகளை இடைநிறுத்துமாறு இஸ்ரேல் ஐ.நா.வைக் கேட்டுக் கொண்டுள்ளது.
காஸா மீதான இஸ்ரேலின் தடைகளை மீறுவதற்கான புதிய முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதால் இச்சம்பவம் குறித்த விசாரணைகளை பிற்போட வேண்டியது அவசியமென இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் எஃகுட் பராக் தெரிவித்துள்ளார்.
கடந்த மேயில் துருக்கி உதவிக் கப்பல் மீது இஸ்ரேலியப் படைவீரர்கள் நடத்திய தாக்குதலில் ஒன்பது பாலஸ்தீன ஆதரவாளர்கள் பலியாகினர்.
இதனைத் தொடர்ந்து இத் தாக்குதல் குறித்த பாரபட்சமற்றதும் நம்பிக்கைத்தன்மை வாய்ந்ததுமான விசாரணைக்கு ஐ.நா. அழைப்பு விடுத்திருந்தது.
இது குறித்த விசாரணையை தமது நிபுணர் குழு நடத்துமென இஸ்ரேல் அறிவித்திருந்த போதும் இஸ்ரேலின் விசாரணை தொடர்பாக ஐரோப்பிய நாடுகள் அதிருப்தி வெளியிட்டிருந்தன.
புதிய உதவிக்கப்பல்கள் காஸாவை நோக்கி வரத் தயாராவதாக தெரிவித்துள்ள எஃகுட் பராக் இதிலொரு கப்பல் லெபனானிலிருந்து புறப்படத் தயாராவதாகவும் இதனால் ஏற்படும் எந்தவொரு வன்முறைகளுக்கும் லெபனானே பொறுப்பெனவும் கூறியுள்ளார்.
இதே வேளை புறப்படத் தயாராகும் புதிய கப்பல்களுக்கு சில பயங்கரவாத அமைப்புகள் ஆதரவு வழங்குவதாகத் தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் இதுவொரு பொறுப்பற்ற நடவடிக்கையெனவும் பராக் தெரிவித்துள்ளார்.
காஸா மீதான தடைகள் குறித்து கடும் சர்வதேச அழுத்தத்தை எதிர்கொண்டிருக்கும் இஸ்ரேல் காஸா மீதான தரை வழித் தடைகளை தளர்த்துவதன் மூலம் உணவு மற்றும் கட்டிட மூலப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்தை அனுமதிக்கவுள்ளதாக கடந்தவாரம் இஸ்ரேல் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பி.பி.சி.
No comments:
Post a Comment