Pages

Your Ad Here

Tuesday, May 4, 2010

உலக கிரிக்கெட் அரங்கில் ஆப்கன் அணி

உலக கிரிக்கெட் அரங்கில் ஆப்கன் அணி
இரு அணிகளின் தலைவர்கள்
இரு அணிகளின் தலைவர்கள்
ஐசீசீ இருபது-20 உலக கிரிக்கெட் போட்டித் தொடரின் முதல் சுற்றில் அறிமுக அணியான ஆப்கானிஸ்தானை எதிர்த்தாடிய இந்திய அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

முதலில் ஆடிய ஆப்கன் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 115 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு ஆடிய இந்திய அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து 14.5 ஓவர்கள் முடிவில் 116 என்ற இலக்கை எட்டி போட்டியில் வெற்றிபெற்றுள்ளது.

எவ்வாறெனினும் உலக கிரிக்கெட் அரங்கில் ஆப்கானிஸ்தான் அணி தனது முதலாவது அறிமுகத்தை பிரபலமான உலக கிண்ண போட்டியொன்றில் ஆரம்பித்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் கீழ் மட்டத்திலான போட்டிகளில் மட்டுமே இரண்டு வருடங்களுக்கு முன்னர் கலந்துகொண்டுள்ள ஆப்கான் அணியின் இன்றைய வளர்ச்சி, ஆப்கானிஸ்தான் விளையாட்டுத்துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தையே காட்டுகின்றது.

பிரமிப்பூட்டுகின்ற ஒரு பயணம்

அனைத்துவகையான கசப்பான அனுபவங்களுக்கு மத்தியிலும் ஆப்கானிஸ்தான், பணக்காரர்களின் விளையாட்டு என வர்ணிக்கப்படும் கிரிக்கெட் உலகுடன் தன்னையும் இணைத்துக் கொண்டுள்ளது.

கிரிக்கெட் விளையாடும் ஆப்கன் இளைஞன்
கிரிக்கெட் விளையாடும் ஆப்கன் இளைஞன்


அனேகமான ஆப்கானிய கிரிக்கெட் வீரர்கள் புழுதி படிந்த நிலத்திலேயே தமது கிரிக்கெட்டை பழகிக்கொண்டுள்ளனர். 1980 களில் சோவியத் படையெடுப்புக்கு பின்னர் நாட்டை விட்டு புலம்பெயர்ந்த இவர்களில் பலர் பாகிஸ்தான் அகதி முகாம்களின் மண் தரைகளிலும் வறண்ட பூமிகளிலுமே கிரிக்கெட் பயின்றுள்ளனர்.

பத்து வருடங்களுக்கு முன்னர் தாலிபன் இயக்கத்தால் கிரிக்கெட் விளையாட்டு அங்கு தடைசெய்யப்பட்டது.

ஆனாலும் பின்னர் விளையாட்டின்போதும் தொழுகையில் ஈடுபடமுடியும் என்று அறிவிக்கப்பட்டதன் பின்னர் இந்த விளையாட்டு அங்கு சகித்துக்கொள்ளப்பட்டது.

தனக்கென சொந்தமான கிரிக்கெட் அரங்கமொன்று இல்லாதுள்ள நிலையிலும் ஆப்கான் தேசிய அணி 2008 உலக தரப்படுத்தல் மூலம் ஏறுமுகத்தைக் காணத்தொடங்கியது.

இறுதியாக, இருபது-20 உலகக் கிண்ணத்துக்கான இறுதி தெரிவு நிகழ்வில் அபுதாபிக்கு எதிராக பெறப்பட்ட வெற்றி மூலம் உலக கிரிக்கெட் அரங்கில் நுழையும் கனவையும் ஆப்கான் சாத்தியப்படுத்திவிட்டது.

போட்டியில் எதிரணியினரை திணறடிக்கச் செய்யுமளவிற்கு திறம்மிக்க விளையாட்டு வீரர்கள் என்று பெயர் வாங்குமளவுக்கு ஆப்கானிய கிரிக்கெட் வீரர்கள் தம்மை தயார்படுத்திக் கொண்டுள்ளனர்.

தமது வீரர்களின் இந்த திறமைகள் கரீபியன் போட்டிகளி்ல் திறம்பட வெளிப்படும் என நம்புகின்றார் ஆப்கன் அணியின் பயிற்றுவிப்பாளர் கபீர் கான்.

போரின் வடுக்களை சுமந்து...

ஆப்கானிஸ்தான் அணியின் முன்னேற்றங்கள், அதன் நாட்டிலுள்ள ரசிகர்களால் சற்று உன்னிப்பாகவே அவதானிக்கப்படுகின்றது.

இந்த கிரிக்கெட் அணி போரின் வடுக்களை சுமந்துள்ள நாட்டு மக்களுக்கு சாதகமான செய்தியை வெளிப்படுத்தியுள்ளது.

உலகப் போட்டியில் ஆப்கன் அணியின் முதலாவது 'ஸ்கோர் போர்ட்'
உலகப் போட்டியில் ஆப்கன் அணியின் முதலாவது 'ஸ்கோர் போர்ட்'

இருபது-20 கிரிக்கெட் போட்டித் தொடரில் முதற்கட்டத்தை கடந்து அடுத்த சுற்றுக்கு சென்றாலே அது ஆப்கானிஸ்தானைப் பொறுத்தவரை வெற்றிதான்.

இந்தளவுக்கு உற்சாகமான ஈடுபாடும், பெரும் விளையாட்டு அரங்கொன்றில் கிடைக்கக்கூடிய அனுபவங்களும் ஆப்கானிஸ்தானில் விளையாட்டுத்துறை வளர்ச்சிக்கு உந்து சக்தியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails Subscribe