Pages

Your Ad Here

Monday, September 27, 2010

Top 10 அறிவியல்

 01.பன்றிக் காய்ச்சலுக்கு இலவச மருந்து

 
பன்றிக்காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸ்
பன்றிக்காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸ்
பன்றிக் காய்ச்சல் நோயை உண்டாக்கக்கூடிய ஹெச்.1.என். 1. வைரஸ் கிருமிக்கு எதிரான தடுப்பு மருந்தை வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் மக்களுக்கு இலவசமாக வழங்க தமிழக அரசு திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் இந்தக் கிருமி பரவியதாகக் கண்டுபிடிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் எழுநூற்றைம்பதைத் தாண்டியுள்ள நிலையில், மாவட்டங்கள் தோறும் ஏழை மக்களுக்கு இந்த தடுப்பு மருந்தை இலவசமாக தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இத்திட்டம் பற்றிய விபரங்கள் அடுத்த ஓரிரு நாட்களில் வெளியிடப்படும் என்று தெரிகிறது.
ரேஷன் கார்டைக் காட்டி குடும்ப வருமானத்தை நிரூபித்து ஏழை மக்கள் இலவச தடுப்பு மருந்து பெற முடியும் என்று தமிழோசையிடம் பேசிய
தமிழக அரசின் பொதுச் சுகாதாரச் சேவைகள் இயக்குநர் டாக்டர்.பொற்கைப்பாண்டியன் தெரிவித்தார்.
கடந்த ஜனவரியிலிருந்து பார்க்கையில் பன்றிக் காய்ச்சலால் தமிழகத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளது.
கடந்த வாரம் கிண்டியில் உள்ள கிங்ஸ் தடுப்பு மருந்து ஆய்வகத்தில் சலுகை விலையில் இந்த தடுப்பு ஊசி போடும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.



02.குத்துச்சண்டை வீராங்கனை சாதனை
 
குடியரசுத் தலைவரிடம் விருது பெறும் மேரி கோம் (ஆவணம்)
குடியரசுத் தலைவரிடம் விருது பெறும் மேரி கோம் (ஆவணம்)
இந்தியாவைச் சேர்ந்த எம்.சி.மேரி கோம் உலக பெண்கள் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் பட்டத்தை ஐந்தாவது முறையாக வென்று சாதனை படைத்துள்ளார்.
சனிக்கிழமை பார்படோஸில் நடைபெற்ற 48 கிலோ எடை பிரிவின் இறுதி போட்டியில் இவர் ரோமானியாவைச் சேர்ந்த ஸ்ட்லுட் டுடாவை வெற்றி கொண்டார்.
பெண்கள் உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டிகளில்
கலந்து கொண்டு அனைத்து 6 போட்டிகளிலும் பதக்கத்தை வென்ற ஒரே வீராங்கனை இவராவார்.
இதற்கு முன்னர் 46 கிலோ பிரிவிலேயே மேரி கோம் அனைத்து பதக்கங்களையும் வென்று இருந்தார். சனிக்கிழமை நடைபெற்ற போட்டியில் 48 கிலோ பிரிவிலும் மேரி கோம் பதக்கத்தை வென்றுள்ளார்.
தன்னுடைய வெற்றி தொடர்பாக கருத்து தெரிவித்த மேரி கோம், தனது கணவர், ஆதரவாளர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவிப்பதாகவும், 2012 ஆம் ஆண்டு லண்டனில் நடைபெறும் ஒலிம்பிக்ஸ் போட்டியில் பதக்கத்தை வெல்ல முயற்சிக்கவுள்ளதாகவும் கூறினார்.
இந்தியாவில் விளையாட்டுத் துறைக்கு கொடுக்கப்படும் மிக உயர்ந்த கௌரவமான ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருதுனை இவர் 2009 ஆம் ஆண்டில் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.



03.சுரங்க தொழிலாளர்களை மீட்க புதிய முயற்சி
 
சுரங்கத் தொழிலாளிகள்
சுரங்கத் தொழிலாளிகள்
சிலி நாட்டில் பூமிக்கு அடியில் சுரங்கம் ஒன்றில் சிக்குண்டிருக்கும் முப்பத்து மூன்று சுரங்க ஊழியர்களை மீட்கும் பணியில் பயன்படுத்துவதற்காக விசேடமாகத் தயாரிக்கப்பட்டுள்ள இரும்புக் கூண்டு தற்போது தற்பொது தோண்டப்பட்டு வருகின்ற குழியின் வாயிலுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
இந்த இரும்புக் கூண்டைப் பயன்படுத்திதான் சிக்குண்டுள்ள நபர்களை ஒவ்வொருவராக மேலே கொண்டு வர இருக்கிறார்கள்.
தோண்டப்பட்டு வருகின்ற ஆழ்கிணறு கூண்டு சென்று வரும் அளவுக்கு அகலமாக்கப்பட்டவுடன் அது உள்ளே இறக்கப்படும்.
நீளமான மற்றும் குறுகலான இந்த எஃகுக் கூண்டுக்கு ஃபீனிக்ஸ் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் பல நாட்களாக சிக்கித் தவிக்கும் சுரங்க ஊழியர்களை மேலே கொண்டுவந்து அவர்களுக்கு இந்தக் கூண்டு புத்துயிர் அளிக்கும் என்று இதனை வடிவமைத்தவர்கள் நம்புவதால் கிரேக்கப் புராணங்களில் வருகின்ற சாம்பலில் இருந்து உயிர்த்தெழும் பறவையின் பெயரை இந்தக் கூண்டுக்கு அவர்கள் சூட்டியுள்ளனர்.
ஏழு வாரங்களுக்கு முன்னர் பாறை விழுந்து சுரங்கப் பாதை அடைபட்டு இந்த ஊழியர்கள் உள்ளே சிக்கிக்கொண்ட நாளில் இருந்து அவர்களின் உறவினர்கள் பலர் சுரங்க வாயிலில் முகாம் அடித்து தங்கிவருகின்றனர்.
இந்த மீட்புக் கூண்டு வந்திறங்கிய வேளையில் அவர்கள் நம்பிக்கை பொங்க கைதட்டி ஆரவாரித்தனர்.
ஐம்பது செண்டி மீட்டர் விட்டம் கொண்ட இந்தக் கூண்டில் ஒரு ஆள் ஏறி நிற்கப் போதுமான இடம் இருக்கிறதா என்று பார்ப்பதற்காக இதனுள் இந்த உறவினர்களில் சிலர் ஏற்றப்பட்டிருந்தனர்.
பார்க்க முதலில் சின்னதாய்த் தெரிந்தாலும், ஏறி நின்றபோது போதுமான இடம் இருந்தது என்று இவர்கள் கூறினர்.
மீட்புக்கான ஆழ்கிணற்றை சரியான அகலத்தில் தோண்டி முடிக்க வாரக்கணக்கில் ஆகத்தான் செய்யும் என்பதை சிலியின் சுரங்க அமைச்சர் லாரன்ஸ் கொல்போர்ன் தெளிவுபடுத்தினார்.
கீழே இருக்கக்கூடிய பாறைகள் மிகவும் கடினமானவை. அதனால் தோண்டும் போது நாங்கள் சிரமங்களை எதிர்கொள்ள நேரிடலாம். அப்படியான பிரச்சினைகளையெல்லாம் சேர்த்துப் பார்க்கும்போஒது நவம்பர் ஆரம்பத்தில்தான் நபர்களை மீட்க முடியும் என்று நாம் கருதுகிறோம் என்றார் அமைச்சர் லாரன்ஸ்.
சுரங்க ஊழியர்கள் மீட்கப்பட்டவுடன் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று சுகாதார அமைச்சர் ஜேமி மனலிச் தெரிவித்தார்.
ஆழ் கிணறு தயாராகிவிட்டால் ஒரு நாள் கட்டத்தில் இவர்கள் அனைவரையும் ஒவ்வொருவராக மேலே கொண்டுவந்து விட முடியும் என்று தெரிவிக்கப்படுகிறது.


04.இஸ்ரேலினால் குடியேற்றப்பட்டோர்
பலஸ்தீன அதிகாரத்தின் கீழ் வரவேண்டும்



மேற்குக் கரை, கிழக்கு ஜெரூசலம் பலஸ்தீனர்களின் பூமி;
நியூயோர்க்கில் மஹ்மூத் அப்பாஸ்



பலஸ்தீன ஜனாதிபதி மஃமூத் அப்பாஸ் ஐ. நா. பொதுச் சபையில் உரையாற்றுகின்றார். நேரடிப் பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஆரம்பமாக யூதக் குடியேற்றங்களின் தற்காலிக நிறுத்தம் நீடிக்கப்பட வேண்டுமென்கிறார்.
இஸ்ரேல் அரசாங்கம் யூதக் குடியேற்றங்களை நிரந்தரமாக நிறுத்தும் வரை அமைதி கிடையாது. அமைதியா, ஜெரூஸலக் குடியேற்றமா என்பதை இஸ்ரேல் அரசாங்கம் விரைவாக தெரிவு செய்ய வேண்டுமென ஐ. நா. வில் உரையாற்றிய பலஸ்தீன ஜனாதிபதி மஃமூத் அப்பாஸ் தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய மஃமூத் அப்பாஸ், அமைதியைக் கொண்டு வருவதற்கான முயற்சியில் நாங்கள் தெளிவாகவும் உறுதியாகவுமுள்ளோம்.
இறுதியான பேச்சுவார்த்தைக்குள் நுழையத் தீர்மானித்துவிட்டோம். சர்வதேசம் எதிர்ப்பார்ப்பது போல் பலஸ்தீன அரசின் சுயாட்சியை நிறுவவும் முயற்சித்துக் கொண்டிருக்கின்றோம். இரண்டு நாடுகள். இரண்டு எல்லைகள் என்பதே எங்கள் நோக்கு. ஆனால், கிழக்கு ஜெரூஸலம், மேற்குக் கரை ஆகிய பிரதேசங்களில் இஸரேலின் யூதக் குடியேற்றங்கள் நிரந்தரமாக நிறுத்தப்பட வேண்டுமென்பதில் உறுதியாக உள்ளதாகவும் மஃமூத் அப்பாஸ் உரையாற்றினார்.
மத்திய கிழக்குப் பிரச்சினைனக்கு இறுதித் தீர்வுகாண நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் 2008 ம் ஆண்டு தடைப்பட்டன. காஸா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாலும், கிழக்கு ஜெரூஸலம், மேற்குக் கரை என்பவற்றில் இஸ்ரேலின் திட்டமிட்ட யூதக் குடியேற்றங்கள் தொடர்ந்ததாலும் இந்தப் பேச்சுக்கள் தடைப்பட்டன.
பின்னர் 2010 ம் ஆண்டின் ஆரம்பப் பகுதியில் எகிப்து, அமெரிக்கா முன்னெடுத்த முயற்சிகளால் இஸ்ரேல், பலஸ்தீனர்களிடையே மறைமுகப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகின.
எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் ஆரம்பமான இந்த மறைமுகப் பேச்சுவார்த்தையில் அமெரிக்க, எகிப்து அதிகாரிகள் இஸ்ரேல், பலஸ்தீன் சார்பாகப் பங்கேற்றனர். இதை முன்னிட்டு பத்து மாதங்களுக்கு இஸ்ரேலின் திட்டமிட்ட குடியேற்றங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன.
செப்டம்பர் 26 வரை இதன் கால எல்லையாகும். மறைமுகப் பேச்சுக்கள் எதிர்பார்த்த திருப்தியளித்ததால் நேரடிப் பேச்சுக்கள் ஆரம்பமாகின. இதில் இஸ்ரேல் பிரதமர் பென்ஜெமின் நெதன்யாஹு. பலஸ்தீன ஜனாதிபதி மஃமூத் அப்பாஸ், எகிப்து ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் அமெரிக்க வெளிநாட்டமைச்சர் ஹிலாரி கிளின்டன் ஆகியோர் பங்கேற்றனர். ஐ- நா. வின் 65 வது பொதுக் கூட்டம் ஆரம்பமானதையடுத்து மூன்றுவாரங்களுக்கு மத்திய கிழக்கு நேரடிப் பேச்சுக்கள் இடை நிறுத்தப்பட்டன.
இந்நிலையில் யூதக் குடியேற்றங்களை நிறுத்தி வைக்க இஸ்ரேல் விடுத்த கால எல்லையும் (செப். 26) முடிவடைந்துள்ளது. இவ்வாறான நிலையில் பலஸ்தீன ஜனாதிபதி மஃமூத் அப்பாஸ் ஐ. நா. வில் உரையாற்றியுள்ளார். இஸ்ரேலின் யூதக் குடியேற்ற நிலைப்பாடு, பலஸ்தீனர்களின் எதிர்காலத் தலைநகர் ஜெரூஸலம் என்ற கொள்கைக் கிடையில் சமாதானத்தை ஏற்படுத்த அமெரிக்க ஜனாதிபதி பெரும்முயற்சிகளை முடுக்கிவிட்டுள்ளார். சமாதானம் நிச்சயத்தன்மையிலிருந்து தூரத்திலுள்ளதாக இஸ்ரேல், பலஸ்தீனத் தரப்புகள் தெரிவித்துள்ளன.
செப்டம்பர் 26 ற்குப் பின்னர் இஸ்ரேல் குடியேற்றங்கள் மீண்டும் தொடருமா, இல்லையா என்பது பற்றி இஸ்ரேல் பிரதமரிடமிருந்து தெளிவான வார்த்தைகள் இது வரைக்கும் வெளியாகவில்லை. இதுவரை குடியேற்றப்பட்ட முப்பதாயிரம் யூதர்களும் பலஸ்தீனர்களின் அதிகாரத்துக்குள் வரவேண்டுமென்கிறார் அப்பாஸ்.



05.3டி படத்தை இனி தொட்டும் பார்க்கலாம் 

டோக்கியோ: 3டி தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து வருகிறது. ஹாலிவுட்டில் பல சினிமாக்கள் 3டி-யில் வருகின்றன. வீட்டு நிகழ்ச்சிகளை 3டி-யில் படம் பிடிக்கும் கேமராக்கள் வந்துவிட்டன. 3டி ஒளிபரப்பு அனுமதிக்கு டிஸ்கவரி உள்ளிட்ட சேனல்கள் விண்ணப்பித்துள்ளன. 3டி காட்சிகளை பார்த்து ரசிக்கும் டிவியை எல்ஜி, சோனி, பானாசோனிக் நிறுவனங்கள் அறிமுகப்படுத்துகின்றன.

இந்நிலையில், திரையில் தெரியும் 3டி காட்சிகளை தொட்டு, தடவிப் பார்க்கும் வசதியை ஜப்பான் தேசிய அறிவியல், தொழில்நுட்ப நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. திரையில் ஒரு பலூன் வருகிறது என வைத்துக்கொள்வோம். அதை எடுப்பதுபோல கையை கொண்டு சென்றால், நம் கையில் பலூன் தவழ்வதுபோல காட்சி மாறும். பலூனின் பிம்பம் நமது கையிலேயே விழும். பலூனை தத்ரூபமாக நம் கையிலேயே பார்க்கலாம்.

குத்துவது போல விரலை கொண்டு சென்றால், பலூன் பிம்பம் மாறுதல் அடைந்து குழி உருவானது போல காட்சியளிக்கும். பிரத்யேக கேமராக்களின் உதவியுடன் நமது கைகளின் இயக்கம் தொடர்ந்து படம் பிடிக்கப்பட்டது அதற்கேற்ப காட்சிகள் மாறுகின்றன. சுகுபா நகரில் நேற்று நடந்த அறிமுக நிகழ்ச்சியின்போது இதை அந்த நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் செய்துகாட்ட, பார்த்தவர்கள் மிரண்டே போய்விட்டனர். முக்கியமான ஆபரேஷன்கள், வீடியோகேம் ஆகியவற்றில் இத்தொழில்நுட்பத்தை பயன்படுத்த உள்ளனர்.


06.எடுபிடி வேலைக்கு உதவ ரூ. 1.4 கோடியில் ரோபோ 

டோக்கியோ: ஜப்பானில் வயதானவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. 100 வயதை கடந்த வர்கள் எண்ணிக்கை கடந்த ஆண்டில் 44 ஆயிரத்து 449. இது மேலும் 4 ஆயிரம் அதிகரிக்கும் என்று தகவல் தெரிவித்திருக்கிறது அரசு. வீட்டு வேலை, சமையல் வேலை, தோட்டவேலை, வெளியே பேங்க், போஸ்ட் ஆபீஸ் போய்வருவது போன்றவற்றில் ஒத்தாசைக்கு பிள்ளைகள் இல்லாமல் ஜப்பானியர்கள் ரொம்பவே கஷ்டப்படுகிறார்கள்.

தொழிற்சாலைகள், கம்பெனிகளிலும் ஆட்கள் கிடைப்பது அரிதாக இருக்கிறது. இதனால், அங்கும் ரோபோக்கள் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. கவாடா இண்டஸ்ட்ரீஸ், ஜப்பான் தேசிய அறிவியல், தொழில்நுட்ப கழகம் இணைந்து உருவாக்கிய ‘எச்.ஆர்.பி.&4’தான் இதில் லேட்டஸ்ட்.

ஏறக்குறைய நம் உயரம்தான். 151 செ.மீ. எடை 39 கிலோ. மற்ற ரோபோக்கள் போல ‘வெடுக் வெடுக்’ என்று நடக்காது. ‘ஃபிப்டி கேஜி தாஜ்மகால்’ போல நளினமாக நடக்கும். கூப்பிட்டதும் முதலில் திரும்பி பார்க்கும். நாம் சொல்வதை புரிந்துகொண்டு செயல்படும். புதிய ரோபோக்கள் உருவாக்கும் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பணிகளில் ஈடுபடும் கம்பெனிகள், பல்கலைக்கழகங்களுக்கு மிகவும் பயன்படும் என்கிறது கவாடா. விலை ரூ.1.44 கோடி.

 07.எச்.ஐ.வி.யை குணப்படுத்தும் புதிய மாத்திரை 

நமிபீயாவைச் சேர்ந்த மெர்டக் ஷார்ப் அன்ட் டூஹோம் எனும் மருந்து தயாரிப்பு நிறுவனம் எய்ட்‌ஸை குணப்படுத்தும் அட்ரிப்லா, ஐசென்ட்ரசஸ் எனும் புதிய மாத்திரையினை கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளது. நமீபியாவின் நம்பா நகரில் உலக அளவில் மருந்து தயாரிப்பு பொருட்களை சப்ளை செய்யும் மெர்டக் ஷார்ப் அன்ட் டூஹோம் நிறுவனம் எச்.ஐ.வி. பாதிப்பட்டவர்களின் தொடக்க நிலையில் உள்ள எச்.ஐ.வி.1 எனும் கிருமியினை குணப்படுத்தக்கூடிய மாத்திரையினை கண்டுபிடித்துள்ளது. இது குறித்த அறிக்கையினை நமீபிய அரசின் சுகாரதாரத்துறையினரிடம் அளித்து ஒப்புதல் பெறவுள்ளதாக கூறியுள்ளது. விரைவில் மருந்து கடைகளில் விற்பனைக்கு வரவுள்ளதாகவும் தகவலகள் தெரிவிக்கின்றன. 



08.பிரபஞ்சத்தை உருவாக்கியவர் கடவுள் அல்ல இயற்பியலே : ஸ்டீபன் ஹாக்கிங் 

இந்த பிரபஞ்சத்தை உருவாக்கியது கடவுள் அல்ல, இயற்பியல்ன் கோட்பாடுகளின் விளைவுகளே காரணம் என்று கூறியுள்ளார் உலகப் புகழ் பெற்ற இங்கிலாந்து இயற்பியலாளர் பேராசிரியர் ஸ்டீபன் ஹாக்கிங்.
Muscular dystrophy எனும் உடலியல் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவரான ஹாக்கிங், விண்வெளியியல் ஆய்வுக்கு ஆற்றிய சேவை மிகப் பெரியது. பிளாக் ஹோல்ஸ் குறித்த இவரது ஆய்வு மிகப் பெரியது. இவர் எழுதிய 'த பிரீப் ஹிஸ்டரி ஆப் டைம்' என்ற புத்தகம் மிகப் பிரபலமானது. பிரபஞ்சம் உருவானதற்குக் காரணமான பிங் பாங் குறித்த கருத்தையும் மற்றும் அதற்கு முந்தைய காலகட்டத்தையும் இதில் அவர் விளக்கியுள்ளார்.இங்கிலாந்தின் சன்டே டைம்ஸ் இதழின் சிறந்த புத்தக வரிசையில் தொடர்ந்து 237 வாரங்கள் முதலிடத்தில் இருந்து சாதனை படைத்தது இந்தப் புத்தகம். தற்போது ஹாக்கிங் புதிய தகவலை வெளியிட்டுள்ளார். அது இந்த பிரபஞ்சததை கடவுள் உருவாக்கவில்லை. மாறாக, இயற்பியலின் விதிகளே பிரபஞ்சம் உருவாகக் காரணம் என்று கூறியுள்ளார்.இயற்பியலின் தவிர்க்க முடியாத விதிகளின் விளைவுகளால்தான் இந்த பிரபஞ்சம் உருவானதாக தனது சமீபத்திய 'தி கிரான்ட் டிசைன்' (The Grand Design) என்ற நூலில் எழுதியுள்ளார் ஹாக்கிங்.

இதுகுறித்து ஹாக்கிங் கூறுகையில், இந்த பிரபஞ்சம் உருவாவதற்கு முன்பு அவ்வளவு பெரிய பிரமாண்டமான வெற்றிடம் இருந்தது. எனவே யாரும் வந்து பூமியை உருவாக்க வேண்டிய அவசியம் இல்லை. அதுவாகவே தன்னை உருவாக்கிக் கொண்டுள்ளது இந்த பிரபஞ்சம். இது முற்றிலும் இயற்பியல் சார்ந்ததே. சுருக்கமாக சொன்னால் இந்த பிரபஞ்சம், சுயம்புவாக உருவானது. இதை உருவாக்க கடவுளுக்கு அவசியம் இல்லை. நமது பிரபஞ்சத்தின் அன்றைய நிலை, இன்றைய நிலை, நாம் இந்த பிரபஞ்சத்தில் வாழ முடிவது என அனைத்துக்குமே ஏதாவது ஒரு காரணம் உள்ளது. எதுவுமே மர்மம் இல்லை. எல்லாமே அறிவியல் சார்ந்தது.

பிரபஞ்சம் தானாக உருவாகவில்லை, அதை உருவாக்கியவர் கடவுள்தான். கடவுளின் சக்திதான் பிரபஞ்சத்தை உருவாக்கியது என்பது தவறு, அது சாத்தியமில்லை. கடவுள் வந்து தொட்டுக் கொடுத்து 'ஏ பிரபஞ்சமே உருவாகு' என்று கூறினார் என்று சொல்வது அபத்தமானது என்று கூறியுள்ளார் ஹாக்கிங். அதேசமயம், 1998ல் ஹாக்கிங் எழுதிய 'த பிரீப் ஹிஸ்டரி ஆப் டைம்' நூலில், பூமியின் உருவாக்கலில் கடவுளுக்கும் பங்கு இருக்கலாம் எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதில், பிரபஞ்சத்தின் முழுமையான வரலாற்றை நாம் பார்க்கும்போது, அது முற்றிலும் மனிதகுலத்தின் வெற்றியாக கூறிக் கொள்ள முடியும். அதில் கடவுளுக்கும் ஒரு இடம் இருக்கலாம் என்று கூறியிருந்தார் ஹாக்கிங்.

ஆனால் தற்போது முற்றிலும் இது இயற்பியல் சார்ந்த நிகழ்வு என்று அடித்துக் கூறியுள்ளார் ஹாக்கிங்.தனது புதிய புத்தகத்தில் அவர் கூறுகையில், பிக் பாங் காரணமாக சூரிய குடும்பமும், கோள்களும் உருவாகின. பூமியும் உருவானது. இதற்குக் காரணம், இயற்பியலின் விதிகளால் ஏற்பட்ட விளைவுகளே. இங்கு கடவுளுக்கு எங்குமே இடமில்லை. முற்றிலும் அறிவியல் சார்ந்த நிகழ்வு இது.

என் முன் இரண்டு கேள்விளை வைக்கிறேன். முதல் கேள்வி, நம்மால் புரிந்து கொள்ள முடியாத காரணங்களுக்காக கடவுள் இந்த பிரபஞ்சத்தை உருவாக்கினாரா என்பது.2வது கேள்வி, அறிவியல் கோட்பாடுகளின் அடிப்படையில் பிரபஞ்சம் உருவானதா என்பது. இதில் நான் 2வது கேள்வியையே ஆதரிக்கிறேன். நீங்கள் விரும்பினால் அறிவியலின் கோட்பாடுகளை 'கடவுள்' என்று கூறிக் கொள்ளலாம். அதேசயம் இதைத் தவிர வேறு எந்த கடவுளும் பிரபஞ்சத்துக்கு உரிமை கொண்டாட முடியாது என்பது எனது கருத்து என்கிறார் ஹாக்கிங்.

இருப்பினும் பல விஷயங்கள் இன்னும் புரியாத புதிராகவே உள்ளது. குறிப்பாக பிளாக் ஹோல்கள். இந்த 'இருண்ட சக்தி' பிரபஞ்சம் உருவானபோது ஏற்பட்டதா அல்லது பிரபஞ்சம் உருவானபோது அழிந்து போனதின் மிச்சமா என்பது இதுவரை விளங்கவில்லை. தற்போதைக்கு பிரபஞ்சத்தின் வரலாறு குறித்து உலக அளவில் விஞ்ஞானிகள் ஏற்றுக் கொண்டுள்ள ஒரே முடிவு பிக் பாங் தியரி மட்டுமே. மிகப் பெரிய வெடிப்புப் பிரளயத்தைத் தொடர்ந்து இந்த பிரபஞ்சம் உருவானதாக இந்த பிக் பாங் தியரி கூறுகிறது. 13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பேரண்ட வெடிப்பு நடந்ததாக கடந்த ஆண்டு கணித்துக் கூறப்பட்டது.

தற்போது வெளியாகியிருக்கும் ஹாக்கிங்கின் நூலும் பிரபஞ்ச வரலாறு குறித்த புதிய பார்வைக்கு வித்திடும் என்கிறார்கள்.அமெரிக்காவைச் சேர்ந்த இயற்பியலாளர் லியோனார்ட் லோடினோவுடன் இணைந்து இந்த நூலை எழுதியுள்ளார் ஹாக்கிங். இது செப்டம்பர் 9ம் தேதி வெளியாகிறது.


09.டைனோசர் போய் ஆப்பிள் வந்தது டும் டும் டும்

வெலிங்டன்: எல்லா பழங்களும் சத்து நிறைந்தது என்றாலும் ‘கவுரவ’ பழமாக மதிக்கப்படுவது ஆப்பிள். சம்பள தேதியை ஒட்டித்தான் வாங்க முடியும் என்றாலும் அதன் சுவை அலாதியானது. இதன் ஜீன், அதன் தோற்றம் பற்றி இதுவரை வெளிவராத சுவாரஸ்ய தகவல்கள் தற்போது தெரியவந்துள்ளன. நியூசிலாந்தை சேர்ந்த தாவர மற்றும் உணவு ஆராய்ச்சி நிறுவனம் நடத்தியுள்ள ஆய்வில் தெரியவந்த தகவல்கள்:

பூமியில் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மெகா விலங்கு டைனோசர். கூட்டம் கூட்டமாக இந்த உலகில் சுமார் 16 கோடி ஆண்டுகள் உலா வந்திருக்கின்றன. 6.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஒருநாள்.. பிரபஞ்சத்தில் இருந்து சென்னை நகரத்தில் பாதி சைஸ் இருக்கிற மெகா கல் ஒன்று பயங்கர வேகத்தில் பூமியில் மோதுகிறது. வளிமண்டல ஏரியாவில் கல் நுழைந்ததுமே பூமியின் வெப்பநிலை எகிறுகிறது. அடுத்த கணத்தில் பயங்கர வேகத்தில் அந்த கல் விழுந்ததில் தாறுமாறான மாற்றங்கள் நடக்கின்றன.

காஸ்மிக் கதிர்கள் மற்றும் பயங்கர வெப்பத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் டைனோசர் வகையறா உயிரினங்கள் அத்தனையும் ஒட்டுமொத்தமாக கருகி சாகின்றன. அப்போது பொசுங்கிய டைனோசர்களின் படிமங்கள்தான் அங்கொன்றும் இங்கொன்றுமாக தற்போது கிடைக்கின்றன.
இப்போது ஆப்பிள் கதைக்கு வருவோம். கல் விழும் சம்பவத்துக்கு முன்பு வரை ஆப்பிள் என்பது சாதாரண புதர்ச் செடி போலத்தான் இருந்திருக்கிறது. கல் விழுந்து அதிக வெப்பம் மற்றும் கதிரியக்க கதிர்கள் வெளியேறியதில் ஆப்பிள் மூதாதைச் செடியும் பாதிக்கப்பட்டிருக்கிறது.

அந்த நேரத்தில் அவற்றின் ஜீன்களில் கன்னாபின்னாவென மாற்றங்கள் நிகழ்கின்றன. இடைச்செருகலாக ஏகப்பட்ட மரபணுக்கள் சேர்ந்ததில் புது தெம்பு பெறுகிறது அந்த செடி. எந்த சூழலையும் தாங்குவதற்கு ஏற்ப வலுவான, பெரிய மரமாக மாறுகிறது. அதுவரை சாதாரணமாக இருந்த பழம் புது சுவையும் அதிக சாறுத்தன்மையும் பெறுகிறது.

ஸ்டிராபெரி, ராஸ்பெரி போன்றவையும் ஆப்பிள் வகையை ஒட்டியதுதான். ஆனால், எங்கிருந்து ஆப்பிளுக்கு மட்டும் இவ்வளவு அற்புதமான ருசியும் சாறும் கிடைத்தது என்ற சந்தேகம் இப்போது தீர்ந்திருக்கிறது என்கின்றனர் விஞ்ஞானிகள். உலகம் முழுவதும் ஆண்டுதோறும் சராசரியாக 5.5 கோடி டன் விளைகிறது. உற்பத்தியில் சீனா, அமெரிக்காவை தொடர்ந்து உலக அளவில் 6&வது இடத்தில் இருக்கிறது இந்தியா. ஆப்பிள் தோன்றியது கஜகஸ்தான் மலைப்பகுதி என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்


10.ஸ்டெதஸ்கோப் வேணாம்.. ஐபோன் மட்டுமே போதும் 

லண்டன்: டாக்டருக்கான பிரதான அடையாளம் வெள்ளை கோட் மற்றும் கழுத்தில் தொங்கும் ஸ்டெதஸ்கோப். இந்த 2-வது அடையாளம் மாறப்போகிறது. அதற்கு பதிலாக ஐபோனும் கையுமாக இனி டாக்டர்களை பார்க்கலாம். இன்டர்நெட், இ&மெயில், பேக்ஸ் அனுப்பும் வசதிகள் கொண்ட ஸ்மார்ட் போன்களுக்கு தற்போது அதிக வரவேற்பு உள்ளது. இத்தகைய போன்களை மருத்துவ துறையில் பயன்படுத்துவது தொடர்பாக லண்டன் பல்கலைக் கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் பீட்டர் பென்ட்லி தலைமையில் ஆய்வு நடத்தி அதில் வெற்றியும் பெற்றுள்ளனர்.

ஸ்டெதஸ்கோப்பாக பயன்படும் ஐபோனுக்கு ‘ஐ&ஸ்டெதஸ்கோப்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்பான ஐபோன், பல்வேறு வகைகளில் பயன்படுவதால் அதில் அதிக சக்தி வாய்ந்த கேமரா, சென்சார்கள், மைக் போன்ற கருவிகள் உள்ளன. இவற்றை பயன்படுத்தியே நோயாளியின் இதயத் துடிப்பை துல்லியமாக கண்டறிய முடியும்.

ஐபோனை ஸ்டெதஸ்கோப்பாக பயன்படுத்துவதற்கான ‘டிரயல்’ சாப்ட்வேரை ஆப்பிள் நிறுவனத்தின் இணையதளத்தில் இருந்து இதுவரை 30 லட்சம் டாக்டர்கள் டவுன்லோடு செய்துள்ளனர். சாதாரண மக்களும் செல்போனை பயன்படுத்தியே இதயத்துடிப்பு பற்றி தெரிந்துகொள்வதற்கு ஏற்ப விரைவில் மாற்றங்கள் செய்யப்படும் என்கிறது ஆப்பிள் நிறுவனம். மருத்துவம் தொடர்பாக 6 ஆயிரம் பயன்பாடுகளுக்கு ஸ்மார்ட்போன்கள் இப்போது பயன்படுகின்றன. மருத்துவ சேவைகளுக்காக மூன்றில் ஒரு பங்கு டாக்டர்கள் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்துகின்றனர் என்றும் தகவல் கூறுகின்றனர்.

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails Subscribe